search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நிரந்தரம்"

    பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நீலகிரி கிளை சார்பில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு அறிவித்த தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும், தீபாவளிக்கான கருணை தொகையை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை அரசு நிறைவேற்றக்கோரி ஊட்டி ராஜீவ்காந்தி ரவுண்டானா பகுதியில் பவர் ஹவுஸ் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. நீலகிரி கிளை தலைவர் பொன்னு தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், ஊட்டி கோட்ட செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை திடீரென மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட குன்னூர் செயலாளர் ரமேஷ் உள்பட 51 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். போராட்டம் குறித்து நீலகிரி கிளை தலைவர் பொன்னு கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் ஒப்பந்த ஊழியர்கள் 133 பேர் பணிபுரிந்து வருகின்றனர். வாரியத்தில் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் குளிரையும் பொருட்படுத்தாமல் மரம் விழுந்ததில் சேதமான மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை சீரமைத்து வருகிறோம். 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 700 பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
    பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) விழுப்புரம் கிளை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திட்ட தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கரன், இணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சலீம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 187 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான 329 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனிதனின் உழைப்பை சுரண்டிக்கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதைவிட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரமும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 75 சதவீத ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்துவிட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர்கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர்.

    அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அதற்கு இடம் தராவிட்டால் உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி அவற்றில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களாகவும், மற்றவர்களை அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களாகவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூகநீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட நிர்வாகம் பணி நியமனம் செய்த போதும், கல்வித்துறை அந்த பணியை நிரந்தரம் செய்து ஒப்புதல் அளிக்கவில்லை.

    பணி நிரந்தரம் செய்வதற்கு களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஆசிரியையின் சகோதரர் ஜான் வின்சென்ட்டிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் வின்சென்ட் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசாரின் அறிவுரைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நேற்று மாலையில் நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஜான் வின்சென்ட் கொண்டு சென்றார். அங்கு இருந்த இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோர் அந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 76 தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதிதாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள 76 தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.

    விழாவில் முதல்-அமைச் சர் நாராயணசாமி தலைமை தாங்கி 55 ஆண் ஊழியர்களுக்கு பல்நோக்கு பணியாளர் பதவியும், 21 பெண் ஊழியருக்கு பல்நோக்கு தூய்மை பணி பதவிக்கான ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பணியாளர் துறை செயலாளர் அன்பரசு, சார்பு செயலாளர் ஜெயசங்கர், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×